Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM

இறப்பிலும் இணைபிரியாத வயதான தம்பதி: உறவினர்கள், கிராமத்தினர் சோகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இறப்பிலும் இணை பிரியாமல் வயதான தம்பதி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருப்புவனம் பெரியகோயில் வீதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(74). இவரது மனைவி வசந்தா(64). 40 ஆண்டுகளுக்கு முன், இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் அங்காளி என்ற கோவிந்தராஜன், மகள் சீதாலெட்சுமி உள்ளனர்.

விவசாயம் மற்றும் புரோகிதம் செய்துவந்த கிருஷ்ணமூர்த்தி, சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி வீட்டிலேயே இருந்தார். செவ்வாய்க்கிழமை இருமல் தொந்தரவால் பகல் 12 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்லத் தயாரான கிருஷ்ணமூர்த்தி திடீரென மயங்கிவிழுந்து, மகன் கோவிந்தராஜனின் மடியிலேயே உயிர் துறந்தார்.

இதையறிந்த மனைவி வசந்தாவும், அதிர்ச்சியில் அடுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் ஜானகியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 40 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த தம்பதி இருவரும், அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து செவ்வாய்க் கிழமையே இருவரது இறுதிச் சடங்கையும் உறவினர்கள் மேற்கொண்டனர்.

இதுபற்றி உறவினர், அக்கம்பக்கத்தினர் கூறும்போது, ’ஒருநாள் கூட அவர்களுக்குள் சண்டையோ, பிரச்சினையோ, முரண்பாடுகளோ ஏற்பட்டதில்லை. அந்த அளவுக்கு மனம் ஒப்பி மிகச் சிறந்த தம்பதியருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தனர். கடைசியில் மரணம் கூட அவர்களை பிரிக்க முடியவில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x