

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இயக்கத்துக்கு காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க முடியும் என்பதால், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காவல்கிணறில் இருந்து மயிலாடி விலக்கு மற்றும் தோவாளை வரை அணிவகுத்து நிற்கின்றன. அந்நேரத்தில் கனிமவள லாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள், போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று களியக்காவிளை எல்லையில் இருந்து வரும் வாகனங்களிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதனால் தற்போது புதிய பிரச்சினையாக காவல் கிணறில் இருந்து தோவாளை வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து தோவாளை ஊராட்சி துணைத் தலைவர் தாணு கூறும்போது, “கனரக வாகனங்கள் விதியை மீறி பாரம் ஏற்றிச் செல்கிறதா? என்பதை அறிய மயிலாடி விலக்கில் உள்ள தனியார் லாரி எடை நிலையம் மூலம் சோதித்து பார்க்கின்றனர். இதற்காக திருநெல்வேலி-நாகர்கோவில் வழித் தடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் லாரிகள் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட காலை 10 மணி வரை திருநெல்வேலி வழித் தடத்தில் செல்ல முடியவில்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை கடந்த 5 நாட்களாக தொடர்கிறது. தோவாளையில் இருந்து காவல்கிணறு வரையுள்ள புறவழிச் சாலைகளில் லாரிகளை நிறுத்த வேண்டும். இதன் மூலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீராகும். தற்போது தினமும் ஆயிரம் லாரிகளுக்கு மேல் எடை பரிசோதனை செய்வதால், லாரி எடை நிலையத்தை இப்பகுதியில் அரசே ஏற்படுத்த வேண்டும்” என்றார் அவர்.