Published : 27 Feb 2024 04:02 AM
Last Updated : 27 Feb 2024 04:02 AM
திருநெல்வேலி / கோவில்பட்டி: பாளையங்கோட்டையில் 50 வாகன ஓட்டிகளுக்கு நடிகர் பிரசாந்த் 50 தலைகவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நடிகர் பிரசாந்த் தனது நற்பணிமன்றம் மூலம் சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கியிருந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் 50 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலை கவசங்களை அவர் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாலையில் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் மிக முக்கியம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத்தான் அந்த இழப்பு குறித்த வேதனை தெரியும். எனவே தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே நற்பணி மன்றம் மூலமாக தமிழகத்தில் ஆங்காங்கே ஹெல்மெட் வழங்கி வருகிறோம். அந்தகன் திரைப்படம் சூழல் பார்த்து வெளியிடப்படும். தளபதி விஜய்யுடன் திரைப் படத்தில் நடித்து வருகிறேன்.
அந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக அமையும். அரசியல் களம் குறித்து விஜய்யுடன் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவது உண்டா என்ற கேள்விக்கு, நண்பர்கள் பேசுவதை வெளியே சொல்வது சரியாக இருக்காது என்றார். அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, ‘அதற்கு நிறைய பேர் உள்ளனர். தனது மன்றத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம். அதையே தொடர்ந்து செய்வோம்’ என்று தெரிவித்தார்.
கோவில்பட்டி: இதுபோல் கோவில்பட்டி பெட்ரோல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை வகித்தார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் முன்னிலை வகித்தார். நடிகர் பிரசாந்த் வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசங்களை வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் அமலதாஸ் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT