

சென்னை: காமராஜர், மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்பதால் தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்ததாக தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமாகா அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு