Published : 04 Feb 2018 10:01 AM
Last Updated : 04 Feb 2018 10:01 AM

முதல் தவணையில் விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் முதல் தவணையில் விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காக, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் கை விரலில் அடையாளத்துக்கு மை வைக்கப்பட்டது. செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கடந்த 5 நாட்களாக வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

இதுதொடர்பாக டாக்டர் க.குழந்தைசாமி கூறும்போது, “தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் உள்ளனர். முகாம் நாள் அன்று 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாமைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து மையம் செயல்பட்டது. பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர்.

இவைதவிர சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். விடுபட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் மார்ச் 11-ம் தேதி நடைபெற உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x