

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாதயாத்திரையின் நிறைவு நாளில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அண்ணாமலை வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் மண் என் மக்கள் யாத்திரை 232 தொகுதிகளை கடந்திருக்கிறது. 232-வது தொகுதியாக மதுராந்தகத்தில் முடித்திருக்கிறோம். வரும் 27-ம் தேதி திருப்பூரில் 233, 234-வது தொகுதியை கடக்கிறோம். இந்த கடுமையான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னுடன் இருந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும்திரளாக, ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றனர்.
மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். தமிழக அரசியலில் நாம் எதிர்பார்த்த மாற்றம் 2024 மக்களவை தேர்தலில் நடக்க போகிறது என்பது மிகத்தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர் மோடியின் அற்புதமான ஆட்சி. மறுபக்கம் தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு. இன்னொரு பக்கம் தமிழக மக்களின் நேர்மையான அரசியலுக்கான ஏக்கம். இந்த மூன்றும் 2024-ல் வெற்றி ஆண்டாக நமக்கு மாற இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னுடன் பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர்கள், உதவியவர்கள், யாத்திரையை பார்க்கமுடியாமல் தவறவிட்டவர்கள் அனைவரும் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் பல்லடத்துக்கு வரவேண்டும் என உங்கள் தம்பியாக அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இது அண்ணாமலையின் யாத்திரையோ, பாஜகவின் யாத்திரையோ இல்லை. உங்கள் விழா. பிரதமருக்கு உங்கள் ஆசீர்வாதத்தை கொடுங்கள். கஷ்டத்தில் என்னுடன் வந்திருக்கிறீர்கள். மிகப்பெரிய எழுச்சியை என்னுடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.