

"பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!" என ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் சூசகமாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்றொரு மடல் எழுதியுள்ளார்.
அந்த மடலில், திமுக நிர்வாகிகளுடனான ஆய்வுக்கூட்டம் குறித்து கூறும்போது, "பொது வாழ்வில் - அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும்; எதுவும் நிரந்தரமில்லை என்கிற வாழ்வில், தொண்டர்களின் பாச உணர்வலைகள் மட்டும் ஓயாது கரையேறிச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாக உவகை மேலிடக் காண்கிறேன். ஆம்.. கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது; தொய்வின்றித் தொடர்கிறது; துவளும் நெஞ்சங்களுக்கும் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கிறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.
’காகிதப் பூக்கள் மணக்காது'
"கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான்.
"நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்", என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறக்க முடியுமா?
அண்ணாவும், கருணாநிதியும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்புகளின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்.
"விதையாகும் வேர்", என்ற தலைப்பில் கருணாநிதி..
"ஒரே மரம் தான்
அதன் தண்டு, தரையில் காலூன்றி
ஆகாயம் நோக்கி மேலேறும்;
வேர்களோ இறங்கும் பூமிக்குள்!
பயங்கரப் புயல்மழை ஊழியில் ஆடிடும் மரமோ
படுத்துவிட்ட கிளை முறிந்து தண்டொடிந்து தரை விழும்.
விழாமல் இருப்பது வேர் மட்டும் தான்; எனும்
தாழாத உண்மையுணர்ந்து தன்மானம் போற்றிடுவோம்!
கொற்றமே தாழ்ந்து குடையைக் கவிழ்த்தாலும்
கொள்கையே உயிர் என்போன், வேருக்குச் சமம்;
அந்த வேர் இருந்தால் தான் அதில் தளிர் துளிர்க்கும்"
என்று எழுதிய கவிதை வரிகள், கழக தோழர்க்கும் - தொண்டர்க்கும் பொருத்தம் தானன்றோ!"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.