அரியலூர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது விபரீதம்: நீரில் மூழ்கி சிறுவர்கள் 2 பேர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

அரியலூர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது விபரீதம்: நீரில் மூழ்கி சிறுவர்கள் 2 பேர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று குளித்தபோது நீரில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சிலர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்தனர். இவர்களில் 9 பேர் நேற்று பிற்பகல் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று குளித்து விளையாடி உள்ளனர்.

இங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, நீர் கரையில் மோதி திரும்பிச் செல்லும் ஓரிடத்தில் 30 அடிக்கு பள்ளம் ஏற்பட்டு தற்போது நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தவர்களில் 11-ம் வகுப்பு படித்த சென்னை அம்பத்தூர் முனுசாமி மகன் சந்தானம்(16), பூமிநாதன் மகன் பச்சையப்பன்(16), கல்லூரி பயின்ற தஞ்சாவூர் மாரிமுத்து மகன் தீபக் என்ற தீனதயாளன்(20) ஆகிய 3 பேர் ஆற்றில் பள்ளம் இருந்த பகுதிக்கு சென்றதில், நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து உடன் குளித்தவர்கள் அளித்த தகவலின்பேரில், அரியலூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து அப்பகுதியில் மீன் பிடிக்கும் சிலரின் உதவியுடன் 3 பேரையும் தேடினர். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், திருமானூர் போலீஸார் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

3 மணிநேர தேடுதலுக்குப் பிறகு பச்சையப்பன், சந்தானம் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஆனால், மாலை 6 மணியை கடந்ததால், தீனதயாளனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், தீனதயாளனை மீட்க வேண்டும் என அவரது உறவினர்கள் தஞ்சாவூர்- அரியலூர் சாலையில் கொள்ளிடம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, தேடும் பணி நடைபெறும் என வருவாய்த் துறை மற்றும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in