Published : 26 Feb 2024 05:57 AM
Last Updated : 26 Feb 2024 05:57 AM
உதகை: நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உட்பட மலைப் பகுதிகளில் மகளிர் அதிகளவில் இலவச பயணம் மேற்கொள்ளும்வகையில், அரசு நகர பேருந்துகளுக்கான எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. சமவெளி பகுதிகளில் நகர பேருந்துகளுக்கான எல்லை 35 கிமீ என உள்ள நிலையில், மலைப்பிரதேசங்களில் மிக குறைவான சுற்றளவில் மட்டுமே நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் மகளிர் இலவச பேருந்துபயணத்தை அதிகளவில் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் நகர பேருந்துகளின் எல்லையை 35 கிமீ தூரத்துக்கு விரிவாக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் மு.அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் பயன்பெறும் வகையில் 99பேருந்துகள் இயக்கம், 16 புதியபேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும்,உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுமற்றும் 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் அரசுபேருந்துகளை விபத்தில்லாமல் இயக்கிய ஓட்டுநர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.
அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, நீலகிரியில் இதுவரை நாளொன்றுக்கு சராசரியாக 8600மகளிர் இலவச பயணம் செய்துவந்த நிலையில், இனி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் இலவசபயணம் மேற்கொள்ள முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT