

திருநெல்வேலி: பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிபாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் அறிந்தேன். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப் பெருந்தகை இணையம் வாயிலாக கடிதம் ஒன்றை எனக்கும், சட்டப்பேரவை முதன்மைச்செயலாளருக்கும் அனுப்பி இருந்தார்.
அதில், ‘விஜயதரணி எம்.எல்.ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி காங்கிரஸ் கட்சிசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் படிநடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதுபோல், பாரதிய ஜனதா கட்சியில், தான் இணைந்து கொண்டதாகவும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும் சட்டமன்ற விதி 21 படிவம்-எப் மூலம், ராஜினாமா கடிதத்தை தமது கைப்பட எழுதி இணையம் வாயிலாக எனக்கும், முதன்மைச் செயலாளருக்கும் விஜயதரணி அனுப்பி இருந்தார். மேலும், விஜயதரணி என்னை தொலைபேசியில் அழைத்து, தான் முறைப்படி கடிதத்தை தனது கைப்பட எழுதி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த கடிதத்தை முறையாகபரிசீலனைசெய்து, அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரைவில் இடைத்தேர்தல்? விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை பேரவைத்தலைவர் ஏற்ற நிலையில், விரைவில் சட்டப்பேரவை செயலகத்தால் விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்.
இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஒரு தொகுதி காலியானால், 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியை பொறுத்தவரை, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் களமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.