

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மற்றும் கோவில்பட்டியில் பனைப்பொருட்கள், கடலைமிட்டாய் குறுங்குழுமங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழாவில், தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம்:
விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் ‘வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்' அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ‘கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்' அமைக்கப்படும்.
இந்தக் குழுமங்களுக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்றவசதி, தானியங்கி பேக்கிங்கூடங்கள் மற்றும் உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் ‘வர்த்தக வசதிகள் மையம்' சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.