

மோட்டார் சைக்கிள் மீது மோதி தாறுமாறாக ஓடிய பஸ் மரத்தில் மோதி நின்றது. இதில் மளிகை கடைக்காரர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறுசேரிக்கு செல்லும் (570எஸ்) பஸ் வியாழக்கிழமை காலை புறப்பட்டது. பஸ்ஸை டிரைவர் வெள்ளைச்சாமி(42) ஓட்டினார். ஜவஹர்லால் சாலையில் ஈக்காட்டுத்தாங்கல் காசி தியேட்டர் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது பஸ் மோதி, மோட்டார் சைக்கிளுடன் அதை ஓட்டியவரையும் சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. பின்னர் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இடித்துத் தள்ளி, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் இடித்து நின்றது. பஸ்ஸுக்குள் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று தெரியாமல் அலறினர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விசாரணையில் அவர் அரும்பாக்கம் அசோகா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (42) என்பதும், ஜாபர்கான்பேட்டையில் மளிகை கடை வைத்திருப்பதும் தெரிந்தது. வியாழக்கிழமை காலையில் கோயம்பேடு சென்று தனது கடைக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். அடிபட்டு படுகாயங்களுடன் கிடந்த பெண் எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளத்தை சேர்ந்த துர்கா (21) என்பது தெரிந்தது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக பணிபுரிகிறார். கிண்டி போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி டிரைவர் வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.
தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு
சென்னையில் விபத்துக்குள்ளான மாநகர பஸ் பிரேக் கோளாறுக்கு நிர்வாகமே பொறுப்பு என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
நடராஜன் (தொமுச): மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் ‘மார்க்கோபோலோ’ பஸ் ‘ஏர் பிரேக் சிஸ்டம்’ வசதியுடன் இயக்கப்படுகிறது. எனவே, ஏர் சிஸ்டம் சரியாக இல்லாததாலும், ஏர்லீக் பிரச்சினையை சரிசெய்யாத காரணத்தாலும்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகமே பொறுப்பு.
எம்.சந்திரன் (சிஐடியு): மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் ‘மார்க்கோபோலோ’ பஸ்களில் உரிய ஏர் வசதி இல்லாவிட்டால் அந்த பஸ் உடனே இருக்கும் இடத்திலேயே நின்றுவிடும். இப்படி, இந்த பஸ்கள் பல முறை பழுதாகி நின்றுள் ளன. அடிக்கடி பழுதாகி வருவதால் இந்த பஸ்ஸில் இருந்த ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தை நீக்கி, சாதாரண பஸ்ஸாக இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம்.
ஆய்வு தீவிரப்படுத்தப்படும்
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிரேக் பிரச்சினை காரணமாகத்தான் பஸ் விபத்துக்குள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இனி வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளை விட, மார்க்கோபோலோ பஸ்களில் ஆய்வு தீவிரப்படுத்தப்படும்’’ என்றனர்.