“மக்கள் கோபத்தை திசைதிருப்ப மத்திய அரசு மீது அவதூறு” - முதல்வர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மத்திய அரசு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மத்தியஅரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத போதும், மக்களுக்கு கிடைத்தது அனைத்தும் ஸ்டாலின் கொடுத்தது’ என பேசியிருக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என்று பேசாமல், ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் பாஜக அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது.

ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார். தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in