Published : 26 Feb 2024 05:35 AM
Last Updated : 26 Feb 2024 05:35 AM
சென்னை: மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய “7 சொல் மந்திரங்கள்” ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் திருக்குறள்களை பயன்படுத்திய பின்னணியை இந்த நூல் விளக்குகிறது.
சென்னை இலக்கிய விழாவில் லைஃப்லைன் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய “7 சொல் மந்திரங்கள்” (7 WORD MANTRAS) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்தநூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், மேற்குவங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன், தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நூல் தொடர்பாக மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திருக்குறள் காட்டும் நெறியை உணர்ந்துள்ள பிரதமர்நரேந்திரமோடி, பாரீஸ், தாய்லாந்து, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட 10 இடங்களில் வெவ்வேறு திருக்குறள்களை தனது உரையில் எடுத்துரைத்துள்ளார்.
பிரதமர் எதற்காக திருக்குறள்களை தனது உரையில் பயன்படுத்தினார் என்ற பின்னணியுடன், கொஞ்சம் அரசியலுடன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் குறித்தும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் 100 பக்கங்களை கொண்டது” என்று தெரிவித்தார்.
இந்த நூல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது முன்னுரையில், “சிறந்த மருத்துவ அறுவை சிகிச்சை வல்லுநராக இருந்தாலும் திருக்குறளின் மீது மருத்துவர் ஜே.எஸ். ராஜ்குமாருக்கு இருக்கும் வேட்கை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாக தெரிகிறது.
தமிழ் மொழியின் மீதும், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் பிரதமருக்கு இருக்கும் பாசப் பிணைப்பை இந்த நூல் உணர்த்துகிறது. பன்னாட்டு அரங்கில் திருக்குறளையும், திருவள்ளுவரையும் உயர்த்தி பிடிக்கும் நமது பிரதமரின் நெஞ்சார்ந்த முயற்சிகளை இந்த நூல் சிறப்பிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT