Published : 26 Feb 2024 05:30 AM
Last Updated : 26 Feb 2024 05:30 AM
சென்னை: இந்திய கடலோர காவல்படை சார்பில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல், கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த இளைஞர்கள் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படையின் 48-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, கடலோர காவல்படையின் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான செய்முறை விளக்க சாகச நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி அணைப்பது, தீப்பிடித்த கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பது, படகு சேதமடைந்து செயலிலக்கும் நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுதவிர, கடலில் ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்தும் கடற்கொள்ளையர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடிப்பது, ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், எதிரிகளால் திடீர் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை சமாளித்தல், துப்பாக்கிச் சூட்டின் மூலம் எதிர்தாக்குதல் நடத்துதல் குறித்து பிரம்மாண்டமாக எடுத்துரைக்கும் வகையில் வியக்கவைக்கும் சாகசங்கள் செய்து காட்டப்பட்டன.
இதற்காக கடலோர காவல்படையை சேர்ந்த ஐசிஜிஎஸ் சவுரியா, சுனக், சுஜய், சாகர்,சமுத்திர பெகர்தார், அன்னிபெசன்ட், ராணி அபெக்கா உள்ளிட்ட போர்க் கப்பல்கள், சி-440 ரக சிறிய கப்பல், சேத்தக், துருவ் வகை 4 ஹெலிகாப்டர்கள், 2 டார்னியர் விமானங்கள், 2 அதிவிரைவு ரோந்து படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல் கூறியதாவது:
காவல்படையின் எழுச்சி தினம்: இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்புகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கடல், கடலோர காவல்படையின் பணிகளை விளக்கும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மீனவர்கள் கடலில் பயணித்தாலும் கடலோர காவல்படையின் கப்பல்களில் பயணம் செய்திருக்க மாட்டார்கள். அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாகவும் இதை செய்திருக்கிறோம். கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த இளைஞர்கள் சேர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். முன்பு கடலோர காவல்படையில் பணிபுரிய பலர் விண்ணப்பித்து வந்தனர்.
சவால்கள் நிறைந்த சேவை: ஆனால், இன்றைக்கு இந்த பணியில் சேர பெரும்பாலானோர் விரும்புவதில்லை. தொழில்நுட்ப துறையையே இன்றைய இளைஞர்கள் அதிகம் நாடி செல்கின்றனர். கடலோர காவல் என்பது சவால்கள் நிறைந்த ஒருசேவையாகும். ஒவ்வொரு முறையும் ஓர் உயிரை மீட்பது என்பது மிகவும் திருப்திகரமான நிம்மதியை தரும்.
கடலோர காவல்படைக்கு தனியாக துறைமுகம் என்பது மிகப்பெரிய திட்டமாகும். தமிழகத்தில் கப்பல்களை பழுது பார்ப்பதற்கான துறைமுகங்கள் இல்லை. எனினும் இப்போதைக்கு சென்னை துறைமுகத்தில் காவல்படையின் கப்பல்கள், விமானங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் உள்ளன. செயற்கையான துறைமுகங்களை உருவாக்க ரூ.60 கோடி வரை செலவாகும். இந்த நிதியைகொண்டு கடலோர காவல்படைக்காக பல்வேறு வகை விமானங்கள், கப்பல்களை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT