Published : 08 Feb 2018 09:54 PM
Last Updated : 08 Feb 2018 09:54 PM

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா; பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆயுள்தண்டனை கைதிகள் திருந்தி விட்டார்களா? என்பதை அறிவதற்கான அளவீடு அவர்களின் நன்னடத்தைதான். அதனடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். இது முறையான, சரியான நடவடிக்கைதான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்த வேண்டும். அவர்களும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடாகும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவது முழுக்க முழுக்க நன்னடத்தை அடிப்படையில்தான். அந்த வகையில் பார்த்தாலும் முதன்முதலில் விடுதலை செய்யப்பட வேண்டியது பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள்தான். அவர்கள்தான் தமிழக சிறைகளில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையிலும் முன்னணியில் இருப்பது இவர்கள்தான். இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அவர்கள் சமூகத்திற்காக உழைக்கவும், கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறிய குடும்பக் கடமைகளை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைக்கும். இதற்காகவே அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்த சர்ச்சைகளும், நடைமுறைகளும் இவர்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக்கூடாது. அதற்கேற்ற வகையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x