Published : 26 Feb 2024 05:48 AM
Last Updated : 26 Feb 2024 05:48 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள், கால்வாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, மழைக்காலத்துக்கு முன்பாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
பேரிடர்களைத் தொடர்ந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறையின் சார்பில் ஆலந்தூர் மண்டலம், வார்டு157-க்கு உட்பட்ட ரிவர்வியூ காலனியில் ரூ.24.80 கோடியில் மியாட் பாலம் முதல் விமான நிலையம் வரை அடையாறு ஆற்றின் கரையைபலப்படுத்தும் பணி, அலுவலர் பயிற்சி அகாடமி, மணப்பாக்கம் கால்வாயில் ரூ.34 கோடியில் நடைபெறும் போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை மேம்படுத்தும் பணி, தர்மராஜபுரம் பகுதியில் கொளப்பாக்கம் கால்வாயை ரூ.8.74 கோடியிலான தடுப்புசுவர் கட்டுதல் பணி, குன்றத்தூரில் கொளப்பாக்கம் கால்வாய் 1-லிருந்து ஓடை வரை ரூ.11.72 கோடியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை மழைக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கெருகம்பாக்கம் கால்வாயில் ரூ.19.16 கோடியில் 160 மீ. முதல் 1500 மீ. வரையிலான மேம்படுத்தும் பணி, குன்றத்தூர் சாலையில் உள்ள சிறுபாலப் பணிகளை விரைவாக முடிக்கவும், மணப்பாக்கம் கால்வாயில் வெள்ளநீரை கட்டுப்படுத்த கதவணைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார்.
பருவமழைக் காலங்களில் போரூர் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்வதை தடுக்க, தந்திக் கால்வாய் நீர் போரூர் ஏரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷட்டர் அமைத்து திசை திருப்பப்படுகிறது. வெள்ள நீர் ஓடும் சாலைகளே வெள்ள நீர் வடிகால்களாக மாற்றப்பட்டு, தந்திக் கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் வரைரூ.16.70 கோடி மதிப்பில் 700மீ நீளத்தில் புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதுதவிர, ரூ.39.6 கோடியில் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை 3.3 கி.மீ. நீளத்துக்கு மூடிய கால்வாய் பணி,தாம்பரம்- மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் ரூ.9.7 கோடி மதிப்பில் கூடுதல் பெட்டி வடிவ கால்வாய் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், ரூ.70 கோடியில் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்படும் நேப்பியர் பாலம் முகத்துவாரப் பகுதி கட்டுமானப்பணி, வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.4 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை இணைக்கும் கால்வாய் பணிகளுக்காக நிலம் எடுக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தேனாம்பேட்டை மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் ரூ.42.45 கோடியிலான மறுசீரமைப்புப் பணிகள், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளை ரூ.350.65 கோடியில் நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள், தேனாம்பேட்டையில் ஒப்பனை அறை கட்டுமான பணி, யானைக்கவுனி பாலச் சாலையில் ரூ.30.78 கோடியில் ரயில்வே மேம்பாலம், திருவொற்றியூர் குப்பம் பகுதியில் ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் சுமார் ரூ.180 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும். இந்தப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு இருக்காது.
அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் இருக்க பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்.
வேளச்சேரி, தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு மழைநீர் வருவதற்கான குழாய் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மழை முடிந்த நிலையில், எங்கெங்கு பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனக் கண்டறிந்து, அங்கு பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT