Published : 15 Feb 2018 07:39 AM
Last Updated : 15 Feb 2018 07:39 AM

இணையவழி பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

இணையவழி பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பத்திரப்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் ‘ஸ்டார் 2.0’ என்ற இணையவழி பதிவுத் திட்டத்தை தமிழக அரசு சார்பில் பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஏற்கெனவே பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சர்வர் கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவு, உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில் இணையவழி பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், சேலையூர், படப்பை, பல்லாவரம், பம்மல், குன்றத்தூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் இணையவழி பத்திரப்பதிவை உடனடியாக நிறுத்தி பழைய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “முன்பெல்லாம் கைகளால் பத்திரம் எழுதுவதால் நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் 200 வரை பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. தற்போது இணைய வழி பத்திரப்பதிவு கொண்டு வந்ததால் பத்திரப்பதிவு செய்வதில் மிகவும் தாமதம் ஆகிறது. இதனால் சார் பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பத்திரப்பதிவு செய்ய மக்கள் நாள் கணக்கில் இங்கு வந்து செல்லும் நிலை உள்ளது. வில்லங்கச்சான்று வாங்குவதற்கு கூட முடியவில்லை. இதன் காரணமாக பத்திரப்பதிவு தொழிலே நசியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையை மாற்றி பழைய நடைமுறையை கொண்டு வரவில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x