Published : 26 Feb 2024 04:04 AM
Last Updated : 26 Feb 2024 04:04 AM
திருவாரூர்: நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - கார்த்திகா, மயிலாடுதுறை - காளியம்மாள், தஞ்சாவூர்- குமாயூன் கபீர், பெரம்பலூர்- தேன்மொழி, திருச்சி - ராஜேஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: அதிமுக தற்போது தமிழர் உரிமை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த முழக்கத்தை தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கூறிவந்தோம். எங்களை பாஜகவின் பி டீம் என சொல்கிறார்கள்.
ஆனால், தற்போது தமிழ் தேசிய கொள்கையை முழக்கமாக வைத்து எங்களுக்குதான் அதிமுக ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், எங்கிருந்து பணம் வருகிறது என்று இதுவரை சொல்லவில்லை. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுவதன் வெளிப்பாடாகத்தான், கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக பணம் சம்பாதித்திருப்பதாக புகார் வந்திருந்தால், அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் தான் சோதனை நடத்தியிருக்க வேண்டும்.
மாறாக நாம் தமிழர் கட்சிக்கு வந்து சேரும் இளைஞர் கூட்டத்தை அச்சப்படுத்தும் நோக்கில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சோதனையில் கண்டுபிடித்த உண்மை என்ன? என்பதை அவர்கள் வெளியிடவில்லை. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை, இனி ஒரு நாளும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, தொண்டர்கள் கட்சிப் பணியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT