Published : 25 Feb 2024 05:12 AM
Last Updated : 25 Feb 2024 05:12 AM
சென்னை: பொங்கல் பரிசுத்தொகை யார், யாருக்கு வழங்கப்படவில்லை என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, வெல்லம், கரும்பு அடங்கியபரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு டோக் கன்கள் விநியோகிக்கப்பட்டுன.
இந்நிலையில், டோக்கன் பெறுவதற்காக குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்குச் சென்றபோது கடை மூடப்பட்டு இருந்ததால், தனக்கான ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பொங்கல் பண்டிகைக்காக அரசு ஒதுக்கிய பரிசுத்தொகையை ரேஷன்கடை ஊழியர்கள் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரூ.140 கோடியை ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டனர். பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காமல் என்னைப்போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு மேல்பரிசுத்தொகை வழங்கப்பட வில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள்,அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை யார், யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT