

சென்னை: எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான அவதூறு போன்ற சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் பிரத்யேக பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை அமைக்க ஏற்கெனவே உத்தரவிட்டும், இதுவரையிலும் அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் மார்ச் 5-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி. தாவூத் மியாகான்,தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக்கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏவான எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக எழும்பூர் பெருநகர 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இதுதொடர்பாக எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சிறப்பு நீதிமன்றத்தை நாடியபோது எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் என்றும், நேரடியாக குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அந்த வழக்கை கோப்புக்கு எடுக்க முடியாது எனக்கூறி மறுத்துள்ளது.
அதையடுத்து அவர் மீண்டும் இதுதொடர்பாக எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடியபோது, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான அவதூறு போன்ற சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு கடந்த11.10.19-ல் அரசாணை பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறிகடந்தாண்டு நவ.9-ல் உத்தரவிட் டது.
அதிகார வரம்பை காரணம் காட்டி இந்த அவதூறு வழக்கைகீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த வழக்கைவிசாரணைக்கு ஏற்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி காயிதே மில்லத்கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் தாவூத் மியாகான், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில்வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளைஆஜராகி, எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான அவதூறு போன்றசிறு குற்ற வழக்குகளை விசாரிக்கஎந்த குற்றவியல் நடுவர் நீதி மன்றமும் பிரத்யேக நீதிமன்றமாக அறிவிக்கப்படவில்லை என்பதால்யார் இந்த வழக்கை விசாரிப்பது என்ற குழப்பம் நீதித்துறையில் நீடித்து வருகிறது. எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றம் என இந்த வழக்கை மாறி, மாறி தாக்கல் செய்தும் எந்த பரிகாரமும் கிடைக்காமல் கடந்த 6 மாதங்களாக அலைக்கழிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அஸ்வினி உபாத்யாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை பிரத்யேகமாக நியமிக்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு இந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் எம்.பி., எம்எல்ஏ-க்கள்மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் இதுவரையிலும் ஒரு பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் மனுதாரர் வேறு வழியின்றி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே இந்தவழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் இதுதொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் தகுந்த விளக்கத்துடன் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.