Published : 25 Feb 2024 05:35 AM
Last Updated : 25 Feb 2024 05:35 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே தமிழக நிதியமைச்சர் வீட்டை முற்றுகையிட பேரணியாகச் செல்ல முயன்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மறையூர் ஊராட்சியில், பயணிகள் நிழற்குடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்புஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது.
குடிநீர் திட்டப் பணிக்கு தவறானஇடத்தைத் தேர்வுசெய்து, பணிஉத்தரவு வழங்கிய வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜசேகரன்,பணியை கண்காணிக்கத் தவறிய இளநிலைப் பொறியாளர் பிரபாஆகியோர் கடந்த 15-ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தினர், பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு அமைச்சரின் வீட்டுக்குச் சென்று, அமைச்சரிடம் பெருந்திரள் முறையீட்டு மனுஅளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு காவல் மற்றும் வருவாய்த் துறை அனுமதி மறுத்தது.மேலும், அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டின் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குதமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறைஅலுவலர் சங்க மாவட்டத் தலைவர்ராஜகோபால் தலைமை வகித்தார்.
பின்னர், அமைச்சரின் வீட்டுக்குப் பேரணியாகச் செல்ல முயன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 180 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT