Published : 27 Feb 2018 01:01 PM
Last Updated : 27 Feb 2018 01:01 PM

காவிரி சிக்கலில் மீண்டும் ஒரு வரலாற்று துரோகத்தை செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கடமையை தட்டிக்கழிக்கும் மத்திய அரசு, தமிழகத்திற்கு மீண்டும் ஒரு வரலாற்று துரோகத்தை செய்ய தயாராகி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கட்கரி கூறியிருப்பது அவரது கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்த அவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் அதன் செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். ''காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி. அது மிகவும் எளிதானது அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் பெரிய பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க நான் விரும்பவில்லை'' என்று நிதின்கட்கரி கூறியுள்ளார்.

அதாவது காவிரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமைக்கப்படாது என்பதைத் தான் சுற்றி வளைத்து தெரிவித்திருக்கிறார். 'மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடைமுறை தொடங்கி விட்டது', 'தமிழகமும், கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள்', 'நானே ஒரு விவசாயி தான்' என்று நேர்காணலின் பல்வேறு இடங்களில் கட்கரி குறிப்பிட்டிருந்தாலும் கூட, அது தமிழக மக்களை திருப்திப்படுத்துவதற்கான முயற்சி தானே தவிர உண்மையான அக்கறை அல்ல.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும்; இந்த விஷயத்தில் இனியும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிய பிறகும், அந்த கெடுவுக்குள் காவிரி வாரியத்தை அமைக்க எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது என்று கூறுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். காவிரி மேலாண்மை வாரியம் ஒருபோதும் அமைந்து விடக் கூடாது என்ற கர்நாடகத்தின் மனநிலையைத்தான் மத்திய அமைச்சர் பிரதிபலிக்கிறார். தமிழகமும், கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் என்று கூறிக்கொண்டே ஒரு கண்ணில் வெண்ணெயையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கத் துடிக்கிறார் மத்திய அமைச்சர் கட்கரி. இதன் மூலம் காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு வரலாற்று துரோகத்தை செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்பதற்காக அமைச்சர் கூறும் எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலாண்மை வாரியம் அமைப்பது அமைச்சர் கூறுவது போன்று அவ்வளவு கடினமான பணி அல்ல. மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. சுருக்கமாகக் கூறினால் பக்ரா & பியாஸ் வாரியத்தின் நகலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களை நியமிப்பதில் கூட எந்த சிக்கலும் இல்லை. காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்காலிக மேற்பார்வைக்குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும் சில தொழில்நுட்ப வல்லுநர்களை சேர்த்தாலே போதுமானது. இந்த வழிகாட்டுதல்களின்படி மேலாண்மை வாரியத்தை அமைக்க 6 வாரங்கள் கூட தேவையில்லை. 6 மணி நேரம் போதுமானது. இதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருந்ததால்தான் 4 நாட்களில் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி 30.09.2016 அன்று ஆணையிட்டது. அது சாத்தியமானது என்பதால்தான் அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால், இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கன்னித்தீவு தொடர்கதைக்கு முடிவு காண்பதற்கு இணையான விஷயமாக சித்தரிப்பது நியாயமல்ல.

காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை காங்கிரஸாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழகத்திற்கு துரோகங்களை மட்டுமே பரிசாக கொடுத்து வந்துள்ளன. இப்போதும் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலும், அதில் வெற்றி பெற வேண்டியதும் மட்டும் தான் மத்திய ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரிகிறதே தவிர, தமிழகத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்ற கடமையும், பொறுப்பும் நினைவுக்கு வரவில்லை.பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறை எந்த வகையிலும் பயனளிக்காது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் வலியுறுத்துவதற்காக, இனியும் காத்திருக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக டெல்லி செல்ல வேண்டும். அங்கு பிரதமரிடம் வலியுறுத்துவதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல், அங்கேயே முகாமிட்டு அனைத்து அறப்போராட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தான் தமிழகம் திரும்ப வேண்டும். இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x