Published : 25 Feb 2024 04:02 AM
Last Updated : 25 Feb 2024 04:02 AM
சென்னை: நீதி கேட்கும் விவசாயிகள் மீது ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்துவது ஏற்க இயலாது. உடனடியாக, தாக்குதலை கைவிட்டு விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.
எஸ்.கே.எம் (NP) அமைப்பின் சார்பில், விவசாயிகள் போராட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடைந்த சுப்ரவன்சிங் படத்துக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அஞ்சலி செலுத்திய பிறகு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், எஸ்.கே.எம்.தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதங்களை நிறைவேற்ற கோரி,நீதி கேட்டு டெல்லி நோக்கிபேரணி புறப்பட்ட விவசாயிகளை கடந்த 13-ம் தேதி முதல் தடுத்து நிறுத்தத் தொடங்கினர். ஹரியாணா மாநில எல்லைகளில் காவல்துறை, துணை ராணுவப்படை கொண்டு துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தினர். துப்பாக்கி சூட்டில் சுப்ரவன் என்ற 24 வயது இளம் விவசாயி உயிரிழந்தார். 3 விவசாயிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் ரப்பர் குண்டுகள் காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமர் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தரச் சட்டம், எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது, இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் மோடி அரசு, விவசாயிகள் மீது தாக்குதலை நடத்துகிறது.
நீதி கேட்கும் விவசாயிகள் மீது ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்துவது ஏற்க இயலாது. உடனடியாக தாக்குதலை கைவிட்டு விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை மோடி, தான் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் உடன்நிறைவேற்ற முன்வர வேண்டும்.இதனை வலியுறுத்தி போராட்டம்தீவிரமடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT