

சிங்கம்புணரி: மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக அரசு கைவிட வேண்டும்’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதிக்குழு முடிவுப்படிதான் மத்திய அரசு செயல்பட முடியும். மத்திய அரசோ, நிதி அமைச்சரோ பாரபட்சம் காட்ட முடியாது. ஏற்கெனவே திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் இருந்த போது 30.5 சதவீதம் தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. பின்னர் 32 சதவீதமாக உயர்த்தியது. மோடி பிரதமர் ஆன பிறகு அது 42 சதவீதமாக உயர்த்தப் பட்டது.
மாநில ஜிஎஸ்டி 100 சதவீதம் அந்தந்த மாநிலங்களுக்குத்தான் செல்கிறது. மக்களிடம் திமுக பொய்களை பரப்புகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது. தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்.
திமுகவில் முதல்வர் குடும்பம் மட்டுமின்றி, அமைச்சர்கள் குடும்பத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது. மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக அரசு கைவிட வேண்டும். அண்ணாமலை யாத்திரைக்கு வரும் கூட்டம் நிச்சயமாக வாக்குகளாக மாறும். புது டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே கிடையாது. அவர்கள் வியாபாரிகள், மண்டி உரிமையாளர்கள். இவ்வாறு அவர் கூறினார்.