Published : 24 Feb 2024 10:09 AM
Last Updated : 24 Feb 2024 10:09 AM

தேர்தலுக்கு பிறகு கட்சியிலும் அரசிலும் மாற்றம்: மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

மக்களவை தேர்தலையொட்டி, திமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன.

தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உட்பட 40 தொகுதியிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வெற்றி மகத்தானதாக, பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்கவேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்யவேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும்வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எச்சரிக்கை: கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,‘‘ தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்றுவரும் நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு வந்துள்ளது. பாஜகவின் அநீதிகள், திமுகவின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்கள், அதிமுகவின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் வரும் 26ம் தேதி முதல் வீடுவீடாக சென்று தெரிவிக்க வேண்டும்.

தற்போதைய நிலையில், கட்சி நிர்வாகிகள் முதல் அடிமட்டத்தொண்டர்கள் வரை என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் அதிமுக, பாஜகவினருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம்.

தேர்தலின் போது கடந்த முறையை விட வாக்கு சதவீதம் அதிகம் பெற வேண்டும். வாக்கு குறைந்தால் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு் கட்சியிலும், அரசிலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x