Published : 24 Feb 2024 08:30 AM
Last Updated : 24 Feb 2024 08:30 AM

உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி: ‘யுமாஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்திலும் உருவாக்குவோம் என்று சென்னையில் நேற்று தொடங்கிய ‘யுமாஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதியை தொடங்கி வைத்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘யுமாஜின் 2024’ (Umagine TN) என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை என முக்கியமான 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துக்கென தனி கொள்கை, தனி துறை, டாஸ்க் ஃபோர்ஸ், ‘தமிழ்நெட்-99’ என்று கடந்த 1997-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் அத்துறையில் மாபெரும் பாய்ச்சல் தொடங்கியது. நாட்டின் முதல் டைடல் பூங்காவை 2000-ல் அவர்தான் உருவாக்கினார்.

இந்த ஆட்சிக் காலமும் அதேபோல இருக்கவேண்டும் என்று தீவிரமாக செயல்படுகிறோம். அதனால்தான், தமிழ்நாடு தரவுமைய கொள்கை, தரவு கொள்கை, தகவல் தொழில்நுட்ப துறைக்கான தரநிலை கொள்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளோம். அத்துடன், தகவல் தொழில்நுட்ப நகரங்கள், டைடல் பூங்காக்கள் உருவாக்க கட்டமைப்பாளர்கள், முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். ஐ.டி. நிறுவனங்களுடன் பேசி 5G அலைக்கற்றை அமைப்பதை துரிதப்படுத்தினோம்.

இயற்கை பேரிடர் காலங்களில், இணையம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தோம். அனிமேஷன், காமிக்ஸ், கணினி விளையாட்டு சார்ந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி உள்ளோம். தமிழகத்தில் இத்துறைகள் தொடர்பான வர்த்தகத்தை தொடங்கும் முயற்சிகளை செய்து வருகிறோம்.

தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில் ‘கணித்தமிழ் -24’ மாநாடு நடத்தப்பட்டுள்ளது. 10 நாடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில் துறை வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர். நாட்டிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இதுதான் இந்த ஆட்சியின் தனித்தன்மை.

நீண்டகாலமாக தடைபட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியுள்ளோம். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுரஅடி பரப்பில் ரூ.1,100 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காஉருவாக்கப்படுகிறது.

மதுரையில் 6.4 லட்சம் சதுரஅடியில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் 6.3 லட்சம் சதுரஅடியில் ரூ.350 கோடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் மாநில தரவு மையம் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தை உலகின் மனிதவள தலைநகராக மாற்றுவோம். தகவல் தொழில்நுட்ப துறையினர் தேடிவரும் நகரமாக ஆக்குவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் தமிழகத்தில் உருவாக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தீரஜ்குமார், எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x