Published : 24 Feb 2024 08:35 AM
Last Updated : 24 Feb 2024 08:35 AM
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. அவரது வழியில் பயணித்து, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்கி, மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் தொடர்ந்து செல்லும் நானும், என்னுடன் கரம் கோர்த்து பயணிக்கும் தொண்டர்களும் அதிமுகவை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். இரு பெரும் தலைவர்களின் வழியில் அதிமுக பீடுநடை போடுகிறது.
அடிப்படைத் தொண்டனுக்கும் உச்சபட்ச பதவியை வழங்குவது அதிமுகதான். ஜெயலலிதா சொன்னதைப்போல, இந்த இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டுமெனில், பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சபதமேற்போம். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள்.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, அதை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்போம். 2026-ம் ஆண்டு அதிமுகவின் ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம். இவ்வாறு கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT