Published : 24 Feb 2024 08:59 AM
Last Updated : 24 Feb 2024 08:59 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 65 சதவீத கோயில்களில் எந்த பராமரிப்பு பணியும் சரியாக நடைபெறவில்லை என்றும் அதுதொடர்பாக அரசும் கவலை கொள்வதில்லை என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பழமையான புராதன சிறப்பு மிக்க கோயில்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளில் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாகக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே. கார்த்திகேயன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி, பாரம்பரியமிக்க பழமையான கோயில்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்படாததால் அந்த கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.
உழவாரப் பணி மேற்கொள்ள பக்தர்கள் அனுமதி கோரினால் அதற்கு செயல் அலுவலர்கள் அனுமதி மறுக்கின்றனர் என குற்றம் சாட்டி சில கோயில்களின் புகைப்படங்களையும் ஆதாரமாக சமர்ப்பித்தார்.
ஆனால் அதற்கு அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 65 சதவீத கோயில்களில் எந்த பராமரிப்பு பணியும் சரியாக நடைபெறவில்லை. அதுதொடர்பாக தமிழக அரசும் கவலை கொள்வதில்லை என கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப் பணிகளில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அறநிலையத்துறை 2 வாரங்களில் திட்டம் வகுக்க வேண்டும். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல் பாடப்பெற்ற 540 பழமையான பாரம்பரியமிக்க, புராதன கோயில்களை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி, அந்த 540 கோயில்களின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை, 2 வார காலத்துக்குள் அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT