

திருப்பூர்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தந்தை சா.பெருமாள் சாமி (94).தாயார் தங்கமணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சா.பெருமாள் சாமி கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.50 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருப்பூர் தெற்குமாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் கட்சியினர், பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேரில் சந்தித்து, இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை முத்தூரில் உள்ளபங்களா தோட்டத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி மறைந்தசெய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து வாடும் சாமிநாதனை தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.