‘தி இந்து’வின் ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி நிறைவு விழா: வெற்றி பெற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அறிவுரை

‘தி இந்து’வின் ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி நிறைவு விழா: வெற்றி பெற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அறிவுரை
Updated on
2 min read

சென்னை மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ‘தி இந்து’வின் ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் கூறினார்.

‘தி இந்து’ குழுமம் சார்பில் ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி மூலம் தமிழகம், புதுச்சேரியில் 30,000 பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மூலமாக சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் 6 மாத காலம் தங்கியிருந்து பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.

அவர்களுக்கு சான்றிதழ் வழங் கும் விழாவும், ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியின் நிறைவு விழாவும் சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியாவில் 6 மாத காலம் பயிற்சி பெறுவதற்காக தேர்வான வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவி ஸ்ருதி, சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி மாண வர் அசுதோஷ், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவி ஆதிரை உட்பட 10 பேருக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். அவர் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசியதாவது:

இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதுதான் ‘தி இந்து’வின் ‘கில்லட் வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியின் நோக்கம். தமிழக மாணவர்களி டம் தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிகப்படியான உயிரிழப்புகள் சாலை விபத்துகளால் நிகழ்கின்றன என நினைக்கலாம். ஆனால், உயிரிழப்புகளை ஆராய்ந்தால் தற்கொலைகளே அதிகம். இதை சமூகவியல், மானுடவியல் நோக்கில் அணுகவேண்டி உள்ளது.

பள்ளி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ், தமிழர், தமிழ் கலாச்சாரம் போன்றவற்றை முன்னிறுத்தி பாடத்திட்டத்தை வரையறை செய்து வருகிறோம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சி பெறும் புதுமையான திட்டத்தை உருவாக்கினோம்.

இவ்வாறு உதயச்சந்திரன் கூறினார்.

விழாவில், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், சென்னை நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

முன்னதாக, ‘தி இந்து’ சர்குலேஷன் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து நன்றி கூறினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின்

நடுப்பக்க ஆசிரியர் சமஸ்

இந்தியாவில் கடந்த ஆண்டு உருவானதில் 73% செல்வம், வெறும் 1% பேரிடம் போய்ச் சேர்ந்திருப்பதைச் சொல்கிறது ‘ஆக்ஸ்ஃபோம்’ அறிக்கை. மறுபுறம் 1% செல்வத்தைச் சேர்க்க 67 கோடி இந்தியர்கள் உயிரைக் கொடுத்து உழைப்பதையும் சொல்கிறது. 1% பேர் பட்டியலில் இருப்பதையே ‘வெற்றி’ என்று இளைஞர்களிடம் பலரும் போதிக்கின்றனர். ஆனால், மற்ற 99% பேரின் எதிர்காலத்தில் அக்கறை கொள்வதை ‘தி இந்து’ கருத்தில் கொள்கிறது. என்ன படித்தாலும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றமே உங்கள் இலக்காக இருக்கட்டும்.

டிவி தொகுப்பாளர்

கோபிநாத்

தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். ஆனால், நாம் இன்னும் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து கடன்வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய அவமானம். பொறியியல் பட்டதாரிகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, சமுதாயத்துக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாக திகழ வேண்டும். அவர்கள்தான் உண்மையில் பொறியாளர்கள்.

பேராசிரியை

பர்வீன்  சுல்தானா

தற்போதைய சூழலில் வாய்ப்புகளுக்கு குறைவு இல்லை. அனைவருக்கும் வாய்ப்புகள் தாராளமாய் கிடைக்கின்றன. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஊக்கம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை போன்ற பண்புகள் மிகமிக அவசியம். நாம் ஒவ்வொருவருமே தனித்துவமிக்கவர்கள். அதனால், ஒருபோதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது.

விழாவில், பவார் குழுமத்தின் இயக்குநர் சஞ்சய் லுங்கெட், கார்னர்ஸ்டோர் குழுமத்தின் சர்வதேச தலைமை செயல் அலுவலர் ஜான் கிறிஸ்டோபர், சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் சி.வி.ஜெயகுமார், சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பழனிகுமார், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வர்த்தகப் பிரிவு தலைவர் வி.ஷங்கர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘சாய்ராம்’ சிஇஓ

சாய்பிரகாஷ் லியோ முத்து

மாணவர்களின் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் எங்களையும் இணைத்துக் கொண்டதற்காக ‘தி இந்து’ குழுமத்துக்கு நன்றி. ஆஸ்திரேலியா செல்ல தேர்வாகியுள்ள 10 பேரில் எங்கள் கல்லூரி மாணவர் ஒருவரும் இடம்பெற்றிருப்பதில் பெருமை. பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தினால் அதற்கு தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இசையமைப்பாளர்

ஹிப் ஹாப் ஆதி

இந்திய கல்விக்கும் வெளிநாட்டு கல்விக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. சின்ன வித்தியாசம்தான் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கு ஒரு படிப்பு பிடிக்கிறது என்றால், அது கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருந்து படிப்பார்கள். ஆனால், இங்கு அப்படி அல்ல. நாம் ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக, ஏதேனும் ஒரு படிப்பில் அவசர அவசரமாக சேர்ந்து படிப்போம். இது போட்டிகள் மிகுந்த உலகம். எனவே, அவற்றை எதிர்கொள்வதற்கான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in