

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், முகவர்களிடம் நூல், பாவு பெற்று விசைத் தறியின் மூலம் லுங்கி, வேட்டி போன்றவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நெசவாளர்கள் தங்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யக் கோரி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தீபா தலைமையில், நேற்று முன் தினம் காலை முதல் மாலை 2.45 மணி வரை நெசவாளர்கள், முகவர்கள் இடையே பேச்சுவார்த்தைநடந்தது.
அப்போது, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பொதட்டூர்பேட்டையை சேர்ந்த கலாம் விஜயன் என்ற இளைஞர், கோட்டாட்சியரின் மேஜையின் மீது அச்சுறுத்தும் விதமாக கோப்புகளை தூக்கி வீசி, கோட்டாட்சியரை பணி செய்யவிடாமல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருத்தணி வட்டாட்சியர் மதன் அளித்த புகாரின் அடிப்படையில், கலாம் விஜயன் மீது நேற்று முன்தினம் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், விசைத்தறி நெசவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 3 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தின்போது, ஒலி பெருக்கி வைத்து, கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக பட்டாபிராமபுரம் விஏஓ அளித்த புகாரின் பேரில், கலாம் விஜயன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மீது நேற்று திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், கலாம் விஜயன் உள்ளிட்ட நெசவாளர்கள் 300 பேர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பொதட்டூர்பேட்டை சந்தைபேட்டை பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகலவறிந்து சம்பவ இடம் விரைந்த வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது, அவர்கள் புதிய ஊதியம் ஒப்பந்தம் போடுவது தொடர்பான பேச்சுவார்த்தை பிப். 27-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். அதில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். ஆகவே, ஒரு மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
அனுமதியின்றி நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கலாம் விஜயன் உள்ளிட்ட 300 பேர் மீது பொதட்டூர்பேட்டை போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.