Published : 19 Feb 2018 07:42 AM
Last Updated : 19 Feb 2018 07:42 AM

தன்னம்பிக்கை, லட்சியத்தால் ஐஏஎஸ் கனவு மெய்ப்படும்: ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் ஊக்கம்

‘அடி ஆழ் மனதில் ஐஏஎஸ் லட்சியத்தை வடிவமைத்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் இன்றிலிருந்தே தயாரானால் உங்கள் கனவு மெய்ப்படும்,’ என ஈரோடு ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் - ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு வேளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கஸ்தூரிபா அரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்து பேசியது:

சேலம் கெங்கவல்லியில் அரசுப் பள்ளியில் சராசரியாக படிக்கும் மாணவனாக இருந்த என்னால் ஆட்சியராக முடிந்ததைப் போல, வகுப்பறையில் கடைசி இருக்கையில் அமரும் மாணவராலும் ஐஏஎஸ் தேர்ச்சி பெற முடியும். அடி ஆழ் மனதில் ஐஏஎஸ் லட்சியத்தை வடிவமைத்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் இன்றிலிருந்தே தயாரானால், உங்கள் கனவு மெய்ப்படும். நல்ல நட்பு எனக்கு கிடைத்ததாலே, நானும் உயர் பதவி இலக்கை அடைந்துவிட்டேன். என்னுடன் படித்தவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் உயர் பதவியில் இருக்கின்றனர். தேர்வுக்காக படிப்பதை விட்டு விட்டு, தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு உள்ளது. அதனைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்வது தான் திறமை. நமக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதற்கு ஏற்றார்போல நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளும்போது, சமுதாயத்தில் வெற்றியாளராக பயணிக்க முடியும்.

ஒட்டு மொத்த ஊரும் நம்மை புகழ வேண்டும் என்றும், கவுரவமான அந்தஸ்தை சமுதாயத்தில் பெற வேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது. இதனை ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெறுவதன் மூலம் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

தினமும் நான்கு நாளிதழ்களை வாங்கிப் படியுங்கள். குறிப்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தலைப்பை மட்டும் படிக்காமல் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரையில் படியுங்கள். இதன் மூலம் நாட்டு நடப்புகளை நன்கு அறிந்து கொள்ளவும், அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் முடியும். ஐஏஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு ‘தி இந்து’ நாளிதழ் நல்ல வழிகாட்டியாக உள்ளது என்று பேசினார்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுக்கு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு, பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் சந்திரசேகர், முதல்வர் ஜெயராமன், மேலாளர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையோர் ஆர்வமுடன் தங்களது ஐயங்களை எழுப்பினர். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x