Published : 24 Feb 2024 06:12 AM
Last Updated : 24 Feb 2024 06:12 AM

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் கருவி இணைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் கருவியை இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஈடுபட்ட விசிகவினர், தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துவாக்குப்பதிவு இயந்திரங்களுடனும் விவிபேட் கருவியை இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கம் எழுப்பினர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:

விசிக தலைவர் திருமாவளவன்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிகள் செய்து, மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்துதான் பாஜக ஆட்சிக்கு வந்ததாகத் தரவுகளோடு வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் ஒருபுறம் விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும் நிலையில், மற்றொரு புறம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) வேண்டாம் என வலியுறுத்தி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

பிரதமர் மோடியை இவிஎம் பிரதமர் என்றே அவர்கள் அழைக்கின்றனர். இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் கருவியை இணைக்க வேண்டும் எனவும், ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல்முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்த தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் விசிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: வெற்றிக்காக பாஜக எதையும் செய்யும். எனவே, மக்களைத் திரட்டி பாஜகவை முறியடிப்போம். அதற்கு பாதகமாக இவிஎம் இயந்திரங்கள் இருக்கக் கூடாது. தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறாது. வடமாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்துவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலதுணைச் செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்கின்றன. இதை ஏற்பதற்கு என்ன தடை? நிலை இப்படியே இருக்காது. இதற்கு போராட்டங்கள் அவசியம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், தமிழினியன், ஆதவ் அர்ஜுனா, தலைமைநிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, ``ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துதமிழக அரசு மாறுபட்ட கருத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை பாமக உருவாக்க முயல்கிறது.

இது தேர்தல் அரசியலுக்கான யுக்தி. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் அனைத்தையும் சுமுகமான முறையில் முடிவு செய்வோம். திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x