Published : 24 Feb 2024 05:50 AM
Last Updated : 24 Feb 2024 05:50 AM

பாலகுருசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: தாய்லாந்து அரசு பிப்.27-ல் வழங்குகிறது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, ஜார்க்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகராகவும், இபிஜி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கணினி கல்வி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 1980-களில் இந்தியாவில் கணினி படிப்பு தொடர்பான அறிவை பரப்பியதில் இவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.

அந்த வகையில், ஜாவா, சி, சி போன்ற கணினி படிப்புகள், தொழில்நுட்பத் துறை தொடர்பாக இதுவரை 51 புத்தகங்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, ரஷ்யா உட்பட 7 சர்வதேசமொழிகளில் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கல்வித் துறையில் இவரது சேவையை பாராட்டும் வகையில், தாய்லாந்து அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் மெத்தராத் பல்கலைக்கழகத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறும் கண்டுபிடிப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான சர்வதேச கருத்தரங்கில், பாலகுருசாமிக்கு அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தவான்சென்னியம், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ்திசை’யிடம் பாலகுருசாமி கூறியது:

கணினி கல்வி துறையில் எனது பங்களிப்பை பாராட்டி தாய்லாந்து அரசு விருது அறிவித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது,கணினி கல்வித் துறையில் எனக்குகிடைக்கும் 37-வது விருது. எங்களைப் போன்ற கல்வியாளர்களை இத்தகைய விருதுகள் மேன்மேலும் ஊக்குவிக்கும்.

இன்றைய மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆன்லைன் வாயிலாகவே கற்க விரும்புகின்றனர். ஆன்லைனில் படிப்பதால் தகவல்களை தெரிந்து கொள்ளலாமே தவிர, அதில் வளர்ச்சி பெற முடியாது. கணினி பொறியாளர்களுக்கு திறன் பயற்சி மிகவும் அவசியம். எனவே, செய்முறைபயிற்சிகளிலும், புத்தகங்களை வாங்கி படிப்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x