Last Updated : 08 Feb, 2018 07:08 AM

 

Published : 08 Feb 2018 07:08 AM
Last Updated : 08 Feb 2018 07:08 AM

மத்திய பாதுகாப்புத் துறையின் கொள்கை முடிவுகளால் ஆவடி படை உடை தொழிற்சாலை மூடப்படும் அபாயம்: 2,121 தொழிலாளர்களிள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து

பாதுகாப்புத் துறையின் கொள்கை முடிவுகளால், ஆவடி படை உடை தொழிற்சாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தொழிற்சாலை யில் பணிபுரியும் 2,121 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியா - சீனா இடையே கடந்த 1960-களில் எல்லைத் தகராறு ஏற்பட்டது. அச்சமயத்தில், இந்திய ராணுவம் பின்வாங்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, எல்லைப் பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சீருடைகள், ராணுவ வீரர்களுக்கு வழங்கப் படாததும் ஆகும்.

எனவே, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன், ‘நாடு பாதுகாப்புத் துறையில் சுய சார்பை அடையவேண்டும் என்றால், நாட்டில் பாதுகாப்புத் துறை வீரர்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள், சீருடைகள் உற்பத்தி செய்ய பல தொழிற்சாலை கள் தொடங்க வேண்டும்’ என முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 1961-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் படை உடை தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி உள்ளிட்டவையுடன் 70 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்த தொழிற்சாலை.

இங்கு, நவீன ஆடை வடிவமைப்புக்கு மற்றும் துணியை வெட்டும் நவீன இயந்திரங்கள், உயர் தொழில்நுட்ப தையல் இயந்திரங்கள் மற்றும் முப்படைகளின் சீருடைகள் உள்ளிட்டவைக்கு தேவையான துணி உள்ளிட்ட மூலப்பொருட்களைச் சோதனை செய்யும் மையம் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலையில் தற்போது, 811 பெண்கள் உட்பட 2,121 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ராணுவம், விமானப் படை, கப்பற்படை ஆகிய முப்படை வீரர்களின் தேவைக்கேற்ற சீருடைகள், ராணுவ சின்னம் பதிக்கப்பட்ட சீருடைகள், பாராசூட்கள், கூடாரங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் ரூ.400 கோடி மதிப்பில், சுமார் 12 லட்சம் எண்ணிக்கையில் இந்தத் தொழிற்சாலை யில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்குத் தேவையான சீருடைகளையும் ஆவடி படை உடை தொழிற்சாலை அவ்வப்போது தயாரித்துத் தருகிறது.

மேலும், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்துபோன கஜஹஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ வீரர்களுக்கான சீருடைகளும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதுபோல், ஐ.நா. சபையின் ராணுவ வீரர்கள் 1,500 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிரத்யேகமாக சீருடைகளைத் தயாரித்துத் தந்துள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவடி படை உடை தொழிற்சாலை தற்போது, இந்திய ராணுவம் மற்றும் போலீஸார் பயன்படுத்த ஏதுவாக புல்லட் புரூப் ஜாக்கெட்டினை வடிவமைத்து, அதனைச் சோதனை செய்து வருகிறது. இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால், புல்லட் புரூப் ஜாக்கெட் உற்பத்தி யைத் தொடங்கவும் திட்ட மிட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறையின் சில கொள்கை முடிவுகளால், ஆவடி படை உடை தொழிற்சாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 2,121 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து உள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் ஆவடி படை உடை தொழிற்சாலை தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்த தாவது:

பாதுகாப்புத் துறையின் கீழ், உத்தரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, படை உடை தொழிற்சாலை உள்ளிட்ட 41 தொழிற்சாலைகள் 650 விதமான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி முதல், கடந்த மாதம் 16-ம் தேதி வரை அடுத்தடுத்து சில கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. அதில், குறிப்பாக ராணுவச் சின்னம் பதிக்கப்பட்ட சீருடைகள் உள்ளிட்ட சுமார் 250 பொருட்களை முக்கியத்துவம் இல்லாத பொருட்கள் எனவும், அப்பொருட்களைத் தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் முடிவு எடுத்துள்ளது.

அதன்படி ராணுவ வீரர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் சீருடைப் படியாக வழங்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை முடிவு எடுத்துள்ளது.

இந்தக் கொள்கை முடிவுகளால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, ஆவடி படை உடை தொழிற்சாலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 5 படை உடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

எனவே, ராணுவச் சின்னம் பதிக்கப்பட்ட சீருடைகள் உள்ளிட்டவைகளை முக்கியத்துவம் இல்லாத பொருட்கள் என்ற முடிவை பாதுகாப்புத் துறை திரும்ப பெறவேண்டும். ராணுவச் சீருடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான ஆடைகள் உள்ளிட்டவைகளை, படை உடை தொழிற்சாலைகள் தொடர்ந்து தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

எங்களின் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15-ம் தேதி டெல்லியில், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஆவடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது.

எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், மார்ச் 15-ம் தேதி ஆவடி படை உடை தொழிற்சாலை உள்ளிட்ட 5 படை உடை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x