Published : 23 Feb 2024 03:05 PM
Last Updated : 23 Feb 2024 03:05 PM

“உலகின் மனிதவள தலைநகரமாக தமிழகம்” - கனவுகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழகத்தை மாற்றவேண்டும். அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN 2024” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதலில் நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக, நாட்டுக்குத் தொண்டாற்றி வரும் குடும்பத்திற்குச் சொந்தக்காரர் அவர்.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி-யிலேயும், உலகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யிலேயும் படித்தவர். பல ஆண்டுகள் வெளிநாட்டில் படித்து வேலை செய்திருந்தாலும், அங்கேயே தங்கிடாமல், தமிழகத்துக்கு திரும்ப வந்து, இங்கேயும் தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கிடாமல், அவருடைய அப்பா, தாத்தா போலவே அரசியலில் பங்கெடுத்து, தன்னுடைய அறிவாற்றலை தமிழக மக்களின் நலனுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர் அவர்.

நம்முடைய ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐ.டி.துறைக்கு மாற்றினேன். அவரை நான் மாற்றியதற்கு காரணம் ஐ.டி. துறையிலேயும், நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே எடுத்துகாட்டாய் அமைந்திருக்கிறது. அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

கால்நூற்றாண்டுக்கு முன்பே, வருங்காலம் என்பது, கணினியின் காலம்; தொழில்நுட்ப காலம் என கணித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனால்தான், 1996-2001 காலகட்டத்திலேயே கணினி வாசலை தமிழகத்தில் திறந்து வைத்தார். அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பார்வைகொண்ட முயற்சிகளால்தான், இந்தியாவின் ஐ.டி. தொழிற்புரட்சியில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1997-ல் ஐ.டி. பாலிஸி, ஐ.டி.க்கு என்று தனித் துறை, டாஸ்க் ஃபோர்ஸ், ‘தமிழ்நெட்-99’ என்று ஐ.டி. துறையில் தமிழின் மாபெரும் பாய்ச்சல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கியது. நாட்டின் முதல் ஐ.டி. பார்க்கை, டைடல் பூங்காவை 2000-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

இது எல்லாவற்றையும் கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே செய்த பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதியைத்தான் சேரும். அதனால்தான், நாங்கள் அவரை நவீன தமிழகத்தின் சிற்பி என சொல்கிறோம். ஐ.டி.க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, நமது திராவிட மாடல் அரசின் ஆட்சிக்காலமும் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறோம். அதனால்தான், நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, தமிழ்நாடு தரவு மைய கொள்கை-2021, தமிழகத்துக்கான தரவுக் கொள்கை- 2022, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தர நிலை கொள்கை–2022, தகவல் தொடர்பு உட்கட்டமைப்பிற்கான கொள்கை-2022 என முக்கியமான தகவல் தொழில்நுட்ப கொள்கை முடிவுகளை அறிக்கைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.

அதோடு, பொது, தனியார் கூட்டு முறையில் தகவல்தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க, தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5G அலைக்கற்றை அமைப்பதை துரிதப்படுத்தினோம். இயற்கை பேரிடர் காலங்களில், இணையம் மற்றும் தகவல்தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தோம். அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கணினி விளையாட்டுகள் மற்றும் காமிக்ஸ் துறை சார்ந்த நிறுவனங்களுடன் இரண்டு முறை கலந்துரையாடல்கள் நடத்தினோம்.

நம்முடைய தமிழகத்தில் இந்த துறைகளில் வர்த்தகம் துவக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழகத்தை மாற்றவேண்டும். அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். வளர்ச்சி என்பதை வெறும் எண்கள் மட்டும் அல்ல, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் காட்டுகிறோம். அனைத்து துறைகளும் அதற்கான செயல் திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. அதில் முக்கியமான துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கின்றது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!

ஐ.டி. துறையுடன் வளர்ச்சியும், முன்னேற்றமும் இப்போது நம்முடைய கண்முன்னாடி தெரிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ‘தமிழ்நெட்-99’ மாநாட்டை நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்ற இந்த நேரத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக ‘கணித்தமிழ் -24’ மாநாட்டை நடத்தியிருக்கிறோம்.

10 நாடுகளிலிருந்து 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில்துறை வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டார்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் போன்ற துறைகளில் மொழியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள, செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய தனித்தன்மை. எல்காட்டில் அனுமதி வழிமுறைகளை மேம்படுத்தியதால், 5G அலைக்கற்றை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்தியிருக்கிறோம். தமிழகம் டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தை அறிமுகப்படுத்தியது, சென்ற ஆண்டு செய்த சாதனைகளில், முக்கியமான ஒன்று!

நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியிருக்கிறோம். நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஐசிடி வழியாக நடத்தப்படுகின்ற பயிற்சித் திட்டங்களை அதிகரித்திருக்கிறோம். தமிழகம் மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற 38 ஆயிரத்து 292 இ-சேவை மையங்களில், 25 ஆயிரத்து 726 மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு ‘டிஜிட்டல் புரட்சி’ இல்லையா? சென்னையில் ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, சென்னையில் மட்டும், 11 மில்லியன் சதுர அடி அளவிலான புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே, இந்தத் துறை எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 2021-2022-ஆம் ஆண்டுகளில், சென்னைப் பெருநகரப்பகுதியில் பணியாளர்களுடைய எண்ணிக்கை 40 விழுக்காடு வரைக்கும் அதிகரித்திருப்பதாக சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சில் மதிப்பிட்டிருக்கிறது. கோவையிலேயும் முன்பு எப்போதையும்விட அலுவலகங்கள் அதிகமாக திறக்கப்பட்டிருக்கிறது.

ஐந்து நாட்கள் முன்பு, கடந்த பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்ற புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில், புதிய தகவல்தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடியில், ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் செலவில், மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும். மதுரையில், புதிய டைடல் பூங்காக்கள் 6.4 லட்சம் சதுர அடியில 345 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.

திருச்சியில், 6.3 லட்சம் சதுர அடியில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட இருக்கிறது. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைத்து 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 30 கோடி ரூபாயில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலத்தில் இலவச Wifi வசதிகள் என பல்வேறு திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். இவையெல்லாம் நிச்சயம் ஐ.டி. துறையை வளர்க்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான இந்த துறையில், தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x