

சென்னை: மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில்13-ம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் 14-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் 15-ம் தேதி பதிலுரை அளித்தார். பொது பட்ஜெட் 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ம் தேதி நடந்தது.
அதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று பதில் அளித்தனர். இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.