

சென்னை: மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2-வது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், ஆணைய அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர்கள் இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் இன்று காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுகின்றனர்.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலியிலும் ஆலோசனை நடத்தி,உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
நாளை (பிப்.24) காலை9 முதல் 11 மணி வரை தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலதலைமை தேர்தல் அதிகாரிகள்,காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அப்போது, தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களில் தேர்தல்ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கின்றனர்.
பின்னர், வருமான வரி, வருவாய் புலனாய்வு, போதை பொருள் தடுப்பு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பிறகு,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, செய்தியாளர்களை சந்திக்கின்றனர். மாலை டெல்லி திரும்புகின்றனர்.