

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று பேசியதாவது:
தமிழகத்தில் அரவை மற்றும் பந்து கொப்பரைகள் 1.19 லட்சம் மெட்ரிக் டன் 83,386 விவசாயிகளிடம் இருந்து ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உணவுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9.38 லட்சம் ஹெக்டேர்: பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் 25.12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் வெள்ள நிவாரணமாக 12.58 லட்சம் பேருக்கு ரூ.940 கோடி தரப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2023-24-ம் ஆண்டில் ரூ.65 கோடியில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தியதன் மூலம் நடப்பாண்டு 9.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் முந்தைய ஆட்சியில் சாகுபடி பரப்பு 61.56 லட்சம் ஹெக்டேராக இருந்தது. திமுக பொறுப்பேற்ற பின்னர் 62.6 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியைவிட 1.04 லட்சம் ஹெக்டேர் கூடுத லாகும்.
அதேபோல், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு மொத்தம் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்த விவசாய இலவச மின் இணைப்புகள் எண்ணிக்கை 23.37 லட்சமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.