

கோவை: கோவை மாநகரில் தரம் பிரித்துகுப்பை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குப்பை சேகரிக்க பணியாளர்கள் செல்ல வேண்டிய இடம் குறித்த ‘ரூட் சாட்’ அமைத்துக் கொடுத்தல், குப்பை அள்ளும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீடு வீடாக குப்பை சேகரிப்பது தீவிரப்படுத்தப்படுவதால், திறந்த வெளிகளில் இருக்கும் குப்பைத் தொட்டிகளை ஒவ்வொன்றாக மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். ஆனாலும் திறந்த வெளிகளில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. உடனுக்குடன் அவை அகற்றப் படாததால் குப்பை தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. கணபதி மாநகர், காந்தி மாநகர், விளாங்குறிச்சி சாலை, சேரன் மாநகர், ஆவாரம் பாளையம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் மக்கள் வேறு வழியின்றி அருகில் உள்ள திறந்த வெளிப் பகுதிகளில் குப்பையை கொட்டிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது,‘‘தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை வரவேற்கிறோம். அதே சமயம், சாலையோர திறந்த வெளிப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குடியிருப்புவாசிகள் வீடுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை கொடுத்துவிடுவர்.
நிறுவனங்கள், கடைகளை நடத்துபவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் காலை 9 மணி, 10 மணிக்கு பின்னர் தான் கடையை திறப்பார்கள். அந்த சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் வருவது கிடையாது. எனவே, அவர்கள் சாலையோர தொட்டிகளில் தான் குப்பையை கொட்டும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காலை 10 மணிக்கு பின்னர் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க செல்ல வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு காலை 9.30 மணிக்குள் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.அதன் பின்னர், மக்கள் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று விடுவர்” என்றார். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறும் போது,‘‘குப்பை சேகரிப்புப் பணிக்கு தூய்மைப் பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றாலோ, வருவதேயில்லை என்றாலோ மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.