

சென்னை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை ரூ.640 கோடி செலவில் மீட்பதற்கு பணி ஆணையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் திருவிக நகர் மண்டலம், 69-வது வார்டில் அகரம் சோமையா தெருவில் ரூ.2.75 கோடியிலும், ரங்கசாயி தெருவில் ரூ.3 கோடியிலும் புதிய மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் நினைவிடங்களை பொலிவேற்றம் செய்ய மாநகராட்சி தடையின்மைச் சான்று வழங்கியதற்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தெரு மின் விளக்கு கம்பங்களில் விளம்பரம் செய்து சுமார் ரூ.26 கோடியே 79 லட்சம் வருவாய் ஈட்டுவதற்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள 21 லட்சம் டன் கழிவுகளை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்க ரூ.640கோடி மதிப்பில் 6 அலகுகளாக பணிகளை மேற்கொள்ள, தேர்ந்தெடுக் கப்பட்ட நிறுவனங்களுக்குப் பணிஆணை வழங்கவும் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரையிலான பகுதிகளில் சேகரமாகும் ஈரக்கழிவுகளிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மாநகராட்சி பட்ஜெட் குறித்து, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும்போது, ``ஒரு சில குறைகளைத் தவிர்த்து இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை மனதார பாராட்டுகிறேன்'' என்றார்.
தனியார் கோசாலைகளில் சென்னை மாநகராட்சி நெறிமுறைகளை கொண்டுவரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்ததுணை மேயர், ``மாடு வளர்ப்போர் தனியார் இடங்களில் மாடு வளர்க்கஎந்த தடையும் இல்லை. தெருவில் சுற்றி திரியும் மாடுகளைக் கைப்பற்றத் தான் நடவடிக்கை பொருந்தும்'' என்றார். பட்ஜெட்டை பாராட்டியதற்கு துணை மேயர் நன்றி தெரிவித்தார்.
`திராவிட மாடல்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உமா ஆனந்த் கூறியபோது, திமுக கவுன்சிலர்கள், உங்கள் வாயால் அவையில் `திராவிட மாடல்' எனப் பதிவு செய்துவிட்டீர்களே என்று கூறி மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.