Published : 23 Feb 2024 06:09 AM
Last Updated : 23 Feb 2024 06:09 AM
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை உயர்த்திவழங்குதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க உறுப்பினர்களிடம் பிப்.17 மற்றும் பிப்.21-ம் தேதி ஆகிய நாட்களில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பணிநிரந்தரம்: அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்துத் துறைகளிலும் சிறப்பு ஆள்சேர்ப்பு மூலம் பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்தல், ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், மாணவர்களுக்கான கல்லூரி கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறிப்பாக, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில்.. காலி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்ட பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களை கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கனிவுடன் பரிசீலனை: மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. எனவே, பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT