Published : 23 Feb 2024 04:08 AM
Last Updated : 23 Feb 2024 04:08 AM
மதுரை: பிரதமர் மோடி மதுரை அருகே வீரபாஞ்சான் டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாகத்தில் பிப்.27-ல் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிப்.27-ல் தமிழகம் வருகிறார். அன்று மதியம் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வந்திறங்குகிறார். பிற்பகல் 2.35 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2.40-க்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்லும் பிரதமர் மோடி, மாதப்பூர் ஊராட்சியில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பொதுக் கூட்டத்தை முடித்து பல்லடத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 5.10 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சி முடிந்த பின் சாலை வழியாக மாலை 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்று இரவு தங்குகிறார். தொடர்ந்து பிப்.28-ம் தேதி காலை 8.15 மணிக்கு தனியார் விடுதியிலிருந்து புறப்பட்டு சாலை வழியாக காலை 8.35 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். காலை 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார். அங்கு நடக்கும் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார் என அவரது பயணத்திட்ட விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐஜி என்.கண்ணன், மாநகர காவல் ஆணையர் ஜெ.லோக நாதன் ஆகியோர் டிஐஜி ரம்யா பாரதி, எஸ்பி டோங்கரே பிரவின் உமேஷ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
மதுரை விமான நிலையம், மதுரை - சிவகங்கை சாலையிலுள்ள டிவிஎஸ் பள்ளியில் வளாகத்தை சுற்றிலும் நேற்று முதல் பாதுகாப்புப் பணி குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்யத் தொடங்கினர். பள்ளி வளாகம், விழா மேடை உள்ளிட்ட பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றும் டிவிஎஸ் பள்ளி அருகிலுள்ள ஹெலிபேட் தளம் சுத்தம் செய்யப்படுகிறது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT