வலுக்கும் மேகேதாட்டு விவகாரம் முதல் ஐபிஎல் அட்டவணை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.22, 2024

வலுக்கும் மேகேதாட்டு விவகாரம் முதல் ஐபிஎல் அட்டவணை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.22, 2024
Updated on
3 min read

“குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!”: தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? - இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம்.

மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல”: “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள் வியாழக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி இதுகுறித்து பேரவையில் விவாதிக்க மறுக்கப்பட்டது.

அதேபோல், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும்” என்று கோவை நூலகம் திறப்பு தொடர்பான கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

‘தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட வைக்க முடியாது’: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, “உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறோம். இன்று ஒருவேளை மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும். எனவே இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் பிப்ரவரி 29 அன்று தஞ்சையில் தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டம் ‘பெயர் மாற்றி’ அறிவிப்பா? - தமிழக அரசு மறுப்பு: “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம் ரூபாய்தான். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார்.

தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்த அவர், முதல்வரின் கிராம சாலை திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக தவறாக கூறினார்கள். இத்திட்டம் முழுவதையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “நாங்கள் 10 ஆண்டுகாலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பு வாபஸ்: மைத்தேயி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கலாம் என்று 27 மார்ச், 2023-ல் வழங்கிய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கி மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தப் பத்தி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு மணிப்பூரில் பெரும் இனக் கலவரத்துக்கு வழி வகுத்தது. மாநிலத்தின் குகி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வங்கிக் கணக்கில் இருந்து பாஜக பணம் திருடுகிறது” - காங்கிரஸ்: தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பணத்தை திருடியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து வருமான வரித் துறை ரூ.65.89 கோடியை வரி நிலுவையாக பிடித்தம் செய்துள்ளது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டம் நிறுத்தம்: “ஹரியாணா மாவட்டம் ஷம்பு எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை. துணை ராணுவப் படையினரைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஷம்பு எல்லையில் 23 வயதான சுபாகரன் சிங் தலையில் குண்டடிபட்டு இறந்தார் என்று தெரிந்தது. மேலும் 3 பேர் படுகாயமடைந்ததையும் அறிந்தோம். இந்தச் சூழலில் இரண்டு நாட்கள் டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம்” விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

7-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு சம்மன்: டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் பிப்ரவரி 26-ம் தேதி ஆஜராகும்படி தெரிவித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய 6 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை வெளியீடு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு. வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அட்டவணை முழுவதுமாக அறிவிக்கப்படாமல், மார்ச் 22 - ஏப்ரல் 7ம் தேதி வரை நடக்கும் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணையும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in