Published : 22 Feb 2024 05:26 AM
Last Updated : 22 Feb 2024 05:26 AM

யாருடைய ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது? - சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்றுநடைபெற்ற விவாதத்தில் யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது என்பது தொடர்பாகதிமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து திமுக-அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு;

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிலும் மூலதனச் செலவை விட வருவாய் செலவு தான் அதிகமாக உள்ளது. திமுக ஆட்சி முடியும் போது கடன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக வந்து விடும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முழு நிதியையும் நாம்தான் கொடுத்துள்ளோம். இதற்கிடையே பல்வேறு மூலதன திட்டங்கள் மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

ஆண்டுக்கு ரூ.74 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம். வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் வருவாயைப் பெருக்கவும் அனைத்துவிதமான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிதி மேலாண்மை சீராகவே உள்ளது. கடனும் கட்டுக்குள்தான் இருக் கிறது.

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், கடன் குறையவில்லை. அதை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்? இதற்காக அமைக்கப்பட்ட நிதி மேலாண்மைக் குழு மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

அமைச்சர் தங்கம் தென்னரசு: திமுக ஆட்சியில் 2 பேரிடர்களை சந்தித்துள்ளோம். ஜிஎஸ்டி வரி நிலுவை ரூ.20 ஆயிரம் கோடி இன்னும் வரவில்லை. தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து தான்பெண்களுக்கு மாதம் ரூ.1000 உட்பட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி உட்பட திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தை தவிர மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தான் வருகிறது. அந்த திட்டத்தின் நிதி புதுமைபெண் திட்டத்துக்கு பயன்படுத் தப்படுகிறது. மடிக்கணினி விவகாரத்தில் செமி கண்டக்டர்ஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. அதுதான் பிரச்சினையாக உள்ளது.

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் அந்த திட்டம் மீண்டும் தொடரப்படுமா?

அமைச்சர் தங்கம் தென்னரசு: அதற்கு உகந்த சூழல் ஏற்படும் போது முதல்வருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x