Published : 22 Feb 2024 05:16 AM
Last Updated : 22 Feb 2024 05:16 AM

ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கு போகமாட்டோம்: வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு

கச்சத்தீவு திருவிழா | கோப்புப் படம்

ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இந்திய பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் வேர்க்கோடு பங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 75 விசைப்படகு, 28 நாட்டுப் படகுகளில் 3,455 பயணிகள் திருவிழாவில் பங்கேற்கப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து.

இந்த தீர்ப்பை ரத்து செய்து, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று 5-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும், பயணத்துக்கான விசைப் படகுகளையும் வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தனர்.

திருப்பயணம் ரத்து: இது தொடர்பாக வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராமேசுவரம்மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல முடியாது. எனவே, ராமேசுவரத்திலிருந்து செல்லவிருந்த திருப்பயணம் ரத்து செய்யப்படுகிறது.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பதிவு செய்திருந்த பயணிகள், ராமேசுவரம் வர வேண்டாம். பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட பயணத் தொகையை, வசூலித்தவர்கள் மூலமாகவே திருப்பிக் கொடுக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x