மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம்

மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசுப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் நேற்று முன்தினம் அரூரில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது ஒரு பாத்திரத்தில் அவர் மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய அரூர் சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு(54) என்பவர், மாட்டு இறைச்சி எடுத்துச் சென்றதை காரணம் காட்டி, மோப்பிரிப்பட்டி பகுதியில் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

பேருந்தை வழிமறித்து... பின்னர், வேறு பேருந்து மூலம் பாஞ்சாலை வீட்டுக்கு சென்றுள்ளார். நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து மீண்டும் அன்று இரவு அரூர் நோக்கி வந்தபோது, பாஞ்சாலையின் குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் சிலர் நவலை கிராமம் அருகே பேருந்தை வழிமறித்து, பாஞ்சாலையை நடுவழியில் இறக்கிவிட்டது குறித்து கேட்டபோது, தான் அவ்வாறு செய்யவில்லை என்று நடத்துநர் ரகு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம்குறித்து அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.தொடர்ந்து, அரசுப் பேருந்து நடத்துநர்ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in