

திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டத்துக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பாஜகவினர், நூதனமாக ரோபோ மூலம் அழைப்பு துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சார பணிகளை பாஜக தொடங்கி உள்ள நிலையில், வரும் 27-ம் தேதி பல்லடம் அருகே மாதப்பூரில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயண நிறைவு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இது தொடர்பாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ரோபோ மூலம் பாஜகவினர் அழைப்பு துண்டறிக்கைகளை பொது மக்களுக்கு வழங்கினர்.
மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில் வேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை ரோபோ மூலம் வழங்கினர். அப்போது பாஜக சின்னமான தாமரை புகைப்படங்களை வழங்கினர். பல்லடம் பகுதியில் பொது மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை, கட்சியின் தலைவரான அண்ணாமலையின் முகமூடி அணிந்து கட்சியினர் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, நகர பொதுச் செயலாளர்கள் ரமேஷ் குமார், பன்னீர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.