Published : 22 Feb 2024 04:04 AM
Last Updated : 22 Feb 2024 04:04 AM

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1,321 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிலைக் குழு ( வரி விதிப்பு மற்றும் நிதி ) தலைவர் சர்ப ஜெயாதாஸ் பங்கேற்று 2024 - 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியின் 2024 - 25-ம் நிதியாண்டு வருவாய் வரவு ரூ.4,464 கோடி, செலவு ரூ.4,727 கோடியாக இருக்கும். 2023 - 24-ம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டின் படி வரவு ரூ.4,508 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. செலவு ரூ.4,617 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து வரி: சென்னை மாநகராட்சியின் வருவாய் இனங்களில் முதன்மையான பங்கு வகிப்பது சொத்து வரியாகும். சொத்து வரி 2023 - 24-ம் நிதியாண்டில் 1,680 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024 - 25-ம் நிதியாண்டில் ரூ.1,750 கோடியாக இருக்கும். தொழில் வரி 2023 - 24-ம் நிதியாண்டில் ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டது. 2024 - 25-ம் நிதியாண்டில் ரூ.550 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் வரி வருவாய்: முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி வருவாய் ரூ.300 கோடி, மாநில நிதிக் குழு மானியம் ரூ.980 கோடி, இதர வருவாயாக தொழில் உரிமக் கட்டணம், அங்காடி உரிமக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் மானியங்கள் போன்ற இனங்களின் மூலம் ரூ.884 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியாளர் சம்பளம், ஓய்வூதியம் ரூ.2,046 கோடியாக இருக்கும். பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்புச் செலவினங்கள் ரூ.1,507 கோடி, கடனுக்கான வட்டி செலுத்துதல் ரூ.94.55 கோடியாக இருக்கும். 2024 - 25 நிதியாண்டில் மூலதன வரவு ரூ.3,454 கோடி இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மூலதனச் செலவுக்கு ரூ.3,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு: துறை வாரியாக மழைநீர் வடிகால் துறை பணிகளுக்கு ரூ.1,321 கோடி, பேருந்து சாலைகள் துறைக்கு ரூ.390 கோடி, திடக் கழிவு மேலாண்மைக்கு ரூ.210 கோடி, பாலங்கள் ரூ.268 கோடி, கட்டிடங்கள் ரூ.146 கோடி, கல்வி ரூ.5.80 கோடி, சுகாதாரம் ரூ.3.75 கோடி, குடும்ப நலம் ரூ.55 கோடி, பூங்காக்கள் ரூ.40 கோடி, மின்சாரம் ரூ.50 கோடி, இயந்திர பொறியியல் ரூ.41 கோடி, சிறப்பு திட்டங்கள் ரூ.259 கோடி, பூங்கா, விளையாட்டு திடல் துறைக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்டல அளவில் சிங்கார சென்னை 2.0 திட்டம், நகர்ப் புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழக அரசு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப் படும் திட்டங்களுக்கு ரூ.392 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x